< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு அட்சய பாத்திரமாக திகழும் நூலகங்கள்

தினத்தந்தி
|
12 Oct 2022 12:57 AM IST

போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு அட்சய பாத்திரமாக நூலகங்கள் திகழ்கின்றன.

அறிவை வளர்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகமாகும். ஒரு நூலகத்தில் அனைத்து விதமான புத்தகங்கள் இருப்பதோடு, தகவல் களஞ்சியமாகவும் விளங்கி வருகின்றன. அன்றைய நாளிதழ்கள், புத்தகங்களை படிப்பதற்கு மட்டுமில்லாமல் போட்டித்தேர்வுக்கு தயாராக கூடியவர்கள் பயிற்சி பெறும் வகையிலும், தனியாக அமர்ந்து படிக்கும் வகையிலும் நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. நவீன காலத்திற்கேற்ப டிஜிட்டல் முறைகளும், கணினி முறைகளும் பயன்படுத்தப்படுகிறது.

வாசிக்கும் பழக்கம்

வாசிக்கும் பழக்கம் உடையவர்களின் கால்கள் நூலகத்தின் வாசற்படியை மிதிக்காமல் இருக்க முடியாது. புத்தக வாசிக்கும் பழக்கம் மூலம் பல்வேறு தகவல்களை பெறுவதோடு, அறிவை வளர்த்துக்கொள்ளலாம். வாழ்க்கையின் முன்னேற்ற பாதைக்கு ஒரு அடித்தளமாகவும் அமைகிறது. இதனால் தான் நூலகங்கள் அனைத்து ஊரிலும் அமைக்கப்பட்டு உள்ளன.

அந்தந்த ஊர்களில் உள்ளவர்கள் நூலகத்திற்கு சென்று படித்து வருகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்டு தகவல் களஞ்சியமாகவும், நூல்களின் சேமிப்பு இடமாகும் திகழும் நூலகத்தின் செயல்பாடுகளை பற்றி விசாரித்த போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

92 நூலகங்கள்

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பொது நூலகத்துறை சார்பில் 92 நூலகங்கள் உள்ளன. இதில் புதுக்கோட்டை சந்தைபேட்டையில் மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ளது. இது சற்று பெரிய நூலகமாகும். கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் தலா 40-ம், பகுதி நேர நூலகங்கள் 11-ம் உள்ளன. இதுதவிர அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் நூலகங்கள் தனியாக உள்ளன. புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்திற்கு வாசகர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இங்கு கலை, சமயம், வரலாறு, தகவல்கள், இலக்கியங்கள், நாவல்கள், கிரைம் கதைகள் உள்பட பல்வேறு பிரிவுகளில் சுமர் 1½ லட்சம் புத்தகங்கள் இருப்பு உள்ளன. இதனை மைய நூலகத்தில் உறுப்பினர்களாக தங்களது பெயர்களை பதிவு செய்து புத்தகங்களை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்று படித்து விட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் திருப்பி கொடுப்பார்கள். இவ்வாறு புத்தகம் எடுத்து செல்லும் பழக்கம் உடையவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதுதவிர நூலகத்திற்கு வருகை தந்து அன்றைய நாளிதழ்கள், புத்தகங்களை படிக்கும் வாசகர்களும் அதிகமாக உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

மைய நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து வாசகர் மோகன் கூறுகையில், ''நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாசகராக உள்ளேன். கல்லூரியில் படிக்கும் போதே புத்தகம் எடுத்து படிக்கும் பழக்கம் உண்டு. ஆன்மிகம், நாவல், எழுத்தாளர்கள் புத்தகம் படிப்பது வழக்கம். மைய நூலகம் நல்ல முறையில் இயங்கி வருகிறது. போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு அட்சய பாத்திரமாக நூலகங்கள் திகழ்கிறது. பொதுமக்களுக்கான புத்தகங்கள் ஏராளமாக உள்ளன. நூலகத்தில் அடிப்படை வசதிகளும் நன்றாக உள்ளது'' என்றார்.

சாந்தி:- ''எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளது. குடும்ப கதைகள், வரலாற்று கதைகள், கிரைம் நாவல் புத்தகம் ஆகியவை அதிகம் விரும்பி படிப்பேன். எனது மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனையும் நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துள்ளேன். அவனும் அவ்வப்போது நூலகத்திற்கு வந்து படிப்பான். நூலகத்தில் வாசகர்களுக்கு தேவையானவை உள்ளன. மேலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் நூலகங்களுக்கு சென்று படித்து வருகிறார்கள். மாவட்ட மைய நூலகத்தின் செயல்பாடு நல்ல முறையில் உள்ளது'' என்றார்.

பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

மாவட்ட மைய நூலக அதிகாரி சசிகலா:- ''மாவட்ட மைய நூலகத்திற்கு பொதுமக்கள் வருகை என்பது தற்போது அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூலகத்திற்கு வருகின்றனர். 14 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 100-க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். புரவலர்களும் பலர் நிதி பங்களிக்கின்றனர். மாவட்ட மைய நூலகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வாசகர்கள் அமர்ந்து படிக்க போதுமான ஏற்பாடு, புத்தகங்கள் அடுக்கி வைக்க இட வசதி உள்ளன. இதுதவிர வெளியில் இருந்து புத்தகம் கொண்டு வந்து படிக்கும் நபர்கள் அமர்ந்து படிக்க தனி வசதி உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களும், பார்வையற்றவர்கள் படிக்கும் வகையில் வசதி உள்ளன. கணினி வசதியும் இருக்கிறது. மைய நூலகத்திற்கு கூடுதலாக கட்டிடம் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

விழிப்புணர்வு போட்டி

கிளை நூலகங்களை பொறுத்தவரை பெரும்பாலும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. அங்கும் வாசகர்கள் வருகை சராசரியாக உள்ளன. நூலகங்களுக்கு வாசகர்கள் வருகையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளையும் அவ்வப்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்துகின்றனர். மேலும் நூலகங்களை மேம்படுத்த நூலகத்துறை அதிகாரிகளும் திட்டமிட்டு வருவதாக நூலகர்கள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

வாடகை கட்டிடத்தில் இயங்கும் கறம்பக்குடி கிளை நூலகம்

கறம்பக்குடியை சேர்ந்த முகமதுஜான்:- கறம்பக்குடி கிளை நூலகம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என நீண்டகாலமாக போராடி கறம்பக்குடி பேரூராட்சி காந்தி பூங்காவில் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் நூலக கட்டிடத்திற்காக ரூ.25 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டு பூமிபூஜையும் நடைபெற்றது. ஆனால் கட்டுமான பணி இன்னும் தொடங்கப்படவில்லை. வாடகை கட்டிடத்தில் பல அரிய புத்தகங்கள் இட பற்றாக்குறையால் பயன்படுத்த முடியாத நிலையில் முடங்கி உள்ளன. எனவே நூலக வாசகர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், கல்வியாளர்கள் நலன்கருதி நூலக கட்டுமான பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்