திண்டுக்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்தவர்களை கைது செய்யகோரி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் ரோக்கஸ்வளவன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, மண்டல செயலாளர்கள் தமிழ்வேந்தன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும். தமிழகத்தில் டீ கடைகளில் கடைபிடிக்கும் இரட்டை குவளை முறையை தடுத்து நிறுத்த வேண்டும். தீண்டாமையை கடைபிடிப்போரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில துணை செயலாளர் திருச்சித்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பரசு, செய்தி தொடர்பாளர் சுவீட்ராஜா, மாவட்ட பொருளாளர் சந்திரன், துணை செயலாளர் ஆற்றல்அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திண்டுக்கல் தொகுதிச்செயலாளர் மைதீன்பாவா நன்றி கூறினார்.