< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சியில் எல்பின் நிதி நிறுவனத்துடன் தொடர்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் வீடு உள்பட 18 இடங்களில் சோதனை

தினத்தந்தி
|
13 July 2022 2:37 AM IST

திருச்சியில் எல்பின் நிதிநிறுவனத்துடன் தொடர்புடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் வீடு உள்பட 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

எல்பின் நிதி நிறுவனம்

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பின் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தொகை தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், வட்டியுடன் முதலீட்டுக்கு தகுந்த பொருட்கள் அளிப்பதாகவும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை நம்பி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

இந்தநிலையில், கடந்த ஓராண்டாக வட்டி தொகை திரும்ப வழங்கப்படவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் டெபாசிட் தொகையை திரும்ப கேட்டு அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த நிதிநிறுவனத்தை நடத்தி வந்த ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் அவரது சகோதரர் எஸ்.ஆர்.கே. ரமேஷ் ஆகியோர் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர். இதுகுறித்து முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கவுன்சிலர்

இந்த நிலையில் எல்பின் நிறுவனத்தின் இயக்குனர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலருமான பிரபாகரனின் திருச்சி கீழபுலிவார்டு சாலை வேதாத்ரிநகரில் உள்ள வீடு உள்பட பல்வேறு இடங்களில் திருச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக்குமார், சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டில் கடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பீமநகரில் உள்ள ஒரு அச்சகத்தில் இன்ஸ்பெக்டர் ராமானுஜம் தலைமையில் சோதனை நடந்தது.

18 இடங்களில் சோதனை

திருச்சியில் எல்பின் நிறுவனத்துடன் தொடர்புடைய வீடு, அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்து வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தனியார் நிதி நிறுவனத்தின் அலுவலகத்தின் பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சிதம்பரம் தொகுதிக்கு பணப்பட்டுவாடா செய்ய ரூ.2 கோடிக்கு மேல் கொண்டு சென்றதற்கான வழக்கும் கவுன்சிலர் பிரபாகரன் மேல் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சோதனை முடிவில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கவுன்சிலர் பிரபாகரன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டபோது அவரது பாஸ்போர்ட், 2 செல்போன்கள் மற்றும் ஒரு சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும் செய்திகள்