< Back
மாநில செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அவரது மனைவி கடிதம்
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு அவரது மனைவி கடிதம்

தினத்தந்தி
|
28 May 2022 6:13 PM IST

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ராபர்ட் பயாசுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, ராபர்ட் பயஸ் மனைவி பிரேமா கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ராபர்ட் பயாஸ் மனைவி ரா.பிரேமா, முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கணவர் ராபர்ட் பயஸ் 31 ஆண்டுகளாக புழல் சிறையில் பொய்யான வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 1999-ம் ஆண்டு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் அமர்வில் 2 பேர் எனது கணவருக்கு மரண தண்டனையை ஆயுளாக குறைத்தது மட்டுமல்லாமல், ஒரு நீதிபதி எனது கணவரை நிரபராதி என விடுதலை செய்துவிட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த 9.9.2018 அன்று மாநில அமைச்சரவை கூடி இந்திய அரசமைப்பு கூறு 161-ன்படி எனது கணவரை விடுதலை செய்வதென முடிவெடுத்தபோது உடனே விடுதலை ஆகிவிடுவார் என மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் 44 மாதங்களுக்கு பிறகும் எனது கணவர் விடுதலை செய்யப்படாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எங்களுடைய குடும்பம் மகிழ்ச்சி என்ற ஒன்றை தொலைத்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களுடைய நல்லாட்சி காலத்தில் எனது கணவர் விடுதலை செய்யப்பட்டு எங்களுக்கு மீண்டும் கிடைப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

தங்களுடைய முன்முயற்சியால் எனது கணவர் முழு விடுதலை பெற்று வீடு திரும்பும் வரை எனக்கும், எனது கணவருக்குமான சிகிச்சை பெறவும், எங்கள் மகன், மருமகள், பேரன் ஆகியோரை சந்தித்து மகிழும் நல்வாய்ப்பை வழங்கும் வகையிலும் எனது கணவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி உத்தரவிட பணிவுடன் வேண்டுகிறேன்.

இதுதொடர்பாக கடந்த 24.2.2022 அன்று முறைப்படி தமிழ்நாடு சிறைத்துறை அதிகாரிகளுக்கு எனது கணவர் விண்ணப்பம் அளித்துள்ளார் என்பதையும் தங்கள் கவனத்துக்கு பணிவுடன் கொண்டு வருகிறேன். எனது கணவரின் பரோல் விவகாரத்தில் விரைந்து கனிவான தங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்