< Back
மாநில செய்திகள்
இயற்கையை காத்து இன்பமாக வாழ ஓணம் திருநாளில் உறுதியேற்போம் - ராமதாஸ்
மாநில செய்திகள்

இயற்கையை காத்து இன்பமாக வாழ ஓணம் திருநாளில் உறுதியேற்போம் - ராமதாஸ்

தினத்தந்தி
|
14 Sept 2024 11:24 AM IST

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஓணம் திருநாளையொட்டி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருப்பதாவது;

"சொன்ன சொல் மாறாத மன்னன் மகாபலி மக்களைச் சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாமணனால் பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து தமது மக்களைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தான் திருவோணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

மன்னன் மகாபலியின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும். இந்த நாள் மகாபலி மன்னனை மட்டும் வரவேற்பதற்கான நாள் அல்ல... வாழ்க்கையில் நாம் அனுபவித்து வரும் துன்பங்களை, விலக்கி இன்பங்களையும் வரவேற்பதற்கான நன்நாள் ஆகும். அந்த வகையில் ஒணத்தை வரவேற்போம். ஓணம் திருநாள் அன்பை வலியுறுத்துகிறது. ஓணம் திருநாள் நமக்கு வாழ்க்கைப்பாடமாகவும் திகழ்கிறது. மகாபலி மன்னன் எவ்வாறு மக்கள் மீது அன்பு காட்டினாரோ, அதேபோல், இயற்கை மீதும் அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என்பது தான் ஓணம் சொல்லும் பாடம் ஆகும்.

மகாபலி மன்னனின் மண்ணான கேரளம் ஒவ்வொரு ஆண்டும் இயற்கைச் சீற்றங்களால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவுகள் மலையான மக்களின் வாழ்வில் மாறாத வடுவை உண்டாக்கியுள்ளன. மகிழ்ச்சியான ஓணம் கொண்டாட்டத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் விளையாட்டை நம்மால் வெல்ல முடியாது. ஆனால், இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து கோபத்திற்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.

இயற்கைக்கு இணக்கமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்தால் எந்த பேரழிவும் நம்மைத் தாக்காது. அதன் மூலம் மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு கிடைக்கும். அத்தகைய உன்னத நிலையை உருவாக்க திருவோணம் திருநாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கூறி மீண்டும் வாழ்த்துகிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்