அனைவருக்கும் சுகமான, சுமையற்ற, தரமான கல்வி காமராசரின் பிறந்தநாளில் உறுதியேற்போம் - ராமதாஸ்
|அனைவருக்கும் சுகமான, சுமையற்ற, தரமான கல்வி காமராசரின் பிறந்தநாளில் உறுதியேற்போம், அவரது பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என கூறியுள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
தமிழ்நாட்டில் அரசியல், சமூக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த கர்மவீரர் காமராசருக்கு இன்று 121ஆம் பிறந்தநாள்.
ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவசக் கல்வி, குலக்கல்வி என்ற முறையில் பறிக்கப்பட்ட நிலையில், புதிய பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.
கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகிய துறைகளிலும் எண்ணிலடங்காத திட்டங்களை செயல்படுத்திய விருதுப்பட்டி வீரர் அவர். அவரது பெருமைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதற்காக அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் கடந்து தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்கும் நிலையை உருவாக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.