< Back
மாநில செய்திகள்
சைபர் குற்றங்களை சைபர் ஆக்குவோம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்

தினத்தந்தி
|
30 Nov 2022 11:44 PM IST

சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ‘‘சத்தம் போட்டே குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை’’ என்கிறார். பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார். இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.

கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.

இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாக செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான். இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம்.

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

* வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

* வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

* நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.

* கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.

* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.

சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள். சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.

சைபர் குற்றங்கள், அதன் பாதிப்புகள், தடுக்கும் வழிமுறைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி மோசடி

பெரம்பலூர் மாவட்டம் தொண்டப்பாடியை சேர்ந்த மகாதேவன்:- எனது நண்பர் ஒருவருக்கு செல்போனில் வெளிநாட்டிற்கு குறைந்த செலவில் செல்லலாம் எனக்கூறி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு குறைந்த செலவில் விசா எடுத்து செல்லலாம் எனவும் அவ்வாறு செல்ல விரும்பினால் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பி எனது நண்பர் ரூ.1 லட்சம் வரை செலுத்தி ஏமாந்து உள்ளார். அதாவது ஒவ்வொரு முறையும் மூளை சலவை செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை செலுத்த வைத்து ஏமாற்றி உள்ளனர். கடைசியில் விசாவும் வரவில்லை. ஏமாற்றிய நபர்களையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதேபோல் பங்கு சந்தை கணக்கு (டிமேட் அக்கவுண்ட்) தொடங்கி டிரேடிங் செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக செல்போனில் ஆசை வார்த்தைகள் கூறி பணத்தை முதலீடு செய்ய வைக்கின்றனர். பிறகு நாம் முதலீடு செய்த பணம் முழுவதும் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்று செல்போனுக்கு வரும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணம் செலுத்தி இளைஞர்கள் யாரும் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த பிரபாகரன்:- ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க செல்லும்போது முடிந்தவரை கார்டை அடுத்தவர்களிடம் கொடுத்து பணம் எடுக்காமல் இருக்க வேண்டும். டிஜிட்டல் பேங்கிங் முறையில் பணம் அனுப்பும்போது ஒரு முறைக்கு இருமுறை வங்கி எண் அல்லது மொபைல் எண் குறித்த விவரங்களை சரிபார்க்க வேண்டும். பணத்தை தவறுதலாக அனுப்பி விட்டால் இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்கப்பட்டுள்ள டோல் ப்ரீ எண்ணுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசுகள் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை அடிதட்டு மக்கள் வரை சென்றடையுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப சட்டம்

பெரம்பலூரை சேர்ந்த வக்கீல் பாஸ்கர்:- இந்தியாவில் சைபர் குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் சட்டமசோதாவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் கீழ் தற்போது சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எலெக்ட்ரானிக் மீடியா சாதனங்கள் மூலம் ஒருவரது முகம் அல்லது உடலை பாலியல் ரீதியாக மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் அவரது ஒழுக்கத்தை, நடத்தையை கெடுக்கும் வகையில் பதிவிடுதல் ஐ.டி. சட்டப்பிரிவு 67 ஆகும். கணினி தொழில்நுட்பத்தை (கம்ப்யூட்டர் ரிசோர்ஸ்) பயன்படுத்தி பலருக்கு மோசடியான தகவல்கள் அனுப்பி அவர்களை நம்ப வைத்து பணம் மோசடி செய்தல் ஐ.டி.சட்டம் 66டி-யின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஐ.டி.சட்டம் பிரிவு 67-ன்கீழ் தண்டனைக்குரிய குற்ற நடவடிக்கையாக சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்படுகிறது. அரசியல் தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதும், சமய-சமுதாய பிரச்சினைகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவதும் ஐ.டி.சட்டப்பிரிவு 153 ஏ-ன்கீழ் குற்றமாகும். சமூக ஊடகங்கள் வழியாக போலியான முகவரியை (ஐ.டி.) பயன்படுத்தி, சூதாட்டத்தில் பரிசு கிடைத்துள்ளது என்றுகூறி பணம் சம்பாதித்தல், இணைய வழி குற்றங்கள் பெருகிவருகிறது. கணினி ஐ.பி. முகவரி, செல்போன் தகவல் பரிமாற்றத்தின்போது. செல்பேசி இருப்பிடத்தை வைத்து மட்டுமே சைபர் குற்றவாளிகளை ஐ.டி. சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும். அவ்வாறு கைது செய்யப்படும் குற்றவாளிகளின் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

சைபர் குற்றவழக்குகளை, அடிதடி மற்றும் இதர குற்றவழக்குகளை போல் கருத முடியாது. ஏனெனில் இதர குற்றவழக்குகளில் சாட்சியம் அல்லது நேரில் பார்த்தவர்களை சாட்சியாக சேர்க்க முடியும். ஆனால் சைபர் குற்றவழக்குகளில் செல்போன், கணினியும் மட்டுமே சாட்சியங்களாக கருதமுடியும். அதிலும் செல்போனில் உள்ள தகவல்களை குற்றவாளிகள் அழித்துவிட வாய்ப்புள்ளது. ஆகவே கணினி உபகரணம் சைபர் குற்றவழக்குகளில் ஒரு முக்கிய சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

டேட்டா கார்னர்

பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இந்தாண்டு இதுவரை 17 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 425 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்