தேனி
"போதைப் பழக்கம் இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்"
|சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழாவில், தேனி மாவட்டத்தை போதைப் பழக்கம் இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் என்று கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்தார்.
போதை ஒழிப்பு
தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழா தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசும்போது, 'போதைப் பழக்கத்தை ஒழிக்க ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு ஆளாகும் நபர்கள் தங்களின் பணத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் இழக்கின்றனர். போதைப் பழக்கத்தால் ஏராளமான பாதிப்புகள் உள்ளன. மாணவர்களாகிய நீங்கள் தான் எதிர்காலத்தை வழிநடத்தப் போகும் சக்திகள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் நாடும் ஆரோக்கியமாக இருக்கும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட இடங்களிலும், தங்கள் வீடுகளுக்கு அருகிலும் போதைப் பொருட்கள், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மாணவ, மாணவிகள் தயக்கமின்றி தங்களின் பள்ளி ஆசிரியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்' என்றார்.
தகவல் கொடுக்க வேண்டும்
விழாவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி போலீஸ் துறை சார்பில் பள்ளிகளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற 200 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவர் பேசும்போது, 'மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழியை 410 பள்ளிகளில் படிக்கும் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருட்கள், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. இருப்பினும் போதைப் பொருட்கள் விற்பனை இருப்பதாக தெரியவருகிறது. அப்படி விற்பனை செய்தால் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். தேனி மாவட்டத்தை போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக உருவாக்க ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம்' என்றார்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் ஆகியோர் கலந்துகொண்டு போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், தீமைகள் குறித்து பேசினர். தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் மீனாட்சிசுந்தரம், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சுகுமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல், கல்லூரி செயலாளர் காசிபிரபு, கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் போலீஸ் அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.