< Back
மாநில செய்திகள்
பகைவர்களை தேர்தல் களத்தில் எதிர்கொள்வோம்  சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்பி பேட்டி
கடலூர்
மாநில செய்திகள்

பகைவர்களை தேர்தல் களத்தில் எதிர்கொள்வோம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்பி பேட்டி

தினத்தந்தி
|
27 Nov 2022 12:59 AM IST

பகைவர்களை தேர்தல் களத்தில் எதிர்கொள்வோம் என்று சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

அண்ணாமலை நகர்,

சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

பா.ஜ.க.வும் போட்டியிடட்டும். எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை‌. எங்கள் கொள்கை பகைவர்களை அரசியல் களத்தில், தேர்தல் களத்தில் எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ? அப்படி எதிர்கொள்வோம்.

அரசியல் ஜோக்கர்

தமிழகத்தில் பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி தேர்தலை எதிர்கொள்வது என்கிற அரசியலை தொடர்ந்து முன்னெடுப்போம். அதனை இந்திய அளவில் விரிவுபடுத்துவோம்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ.க.வை எதிர்க்கட்சியாக ஒரு தோற்றத்தை உருவாக்க அண்ணாமலை முயற்சி செய்து வருகிறார். அதனால் தி.மு.க.வை அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவரை அரசியல் ஜோக்கராக மக்கள் பார்க்கின்றனர். மக்களுடைய பிரச்சினைகள் குறித்து களப்பணியாற்றி வருகிறோம். தேர்தல் பணியை உரிய நேரத்தில் தொடங்குவோம். அதற்கு இப்பொழுது அவசியம் இல்லை.

கொரோனாவால் இடைவெளி

சிதம்பரம் தொகுதியில் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். கொரோனா காலக்கட்டத்தில் சற்று இடைவெளி ஏற்பட்டுவிட்டது. சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரெயில்கள் குறித்தும், சில ரெயில்களை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் நான் பலமுறை ரெயில்வே அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். அன்மையில் திருச்சியில் நடைபெற்ற ரெயில்வே ஆலோசனை கூட்டத்திலும் இது குறித்து பேசியுள்ளேன்.

அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்