ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டுவோம் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
|ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்துக்கு சமாதி கட்டுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா எனும் பெருமைக்குரிய ஈடு இணையற்ற தலைவர்கள் கட்டிக்காத்த அ.தி.மு.க. என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் அடிப்படை விதிகளெல்லாம் மாற்றப்பட்டு, சின்னாபின்னமாகி, சுக்குநூறாக சிதறுண்டு ஒரு சிலரின் கையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்பது மாற்றப்பட்டு இருப்பதும், கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுபவருக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது என்பதும், கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கும், அதனை கட்டிக்காத்த ஜெயலலிதாவுக்கும் இழைக்கும் துரோகம்.
நம்முடைய உழைப்பின் மூலமாக, துரோகத்தை துரத்தியடிக்கும் வகையில், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்திருக்கும் சர்வாதிகாரத்திற்கு சமாதி கட்டும் வகையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் கட்சியின் பொன் விழா என முப்பெரும் விழா திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் 24-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த முப்பெரும் விழாவிற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.