< Back
மாநில செய்திகள்
மூன்றாவது சுரங்கம் அமைக்க என்.எல்.சி. திட்டம்; மண்ணையும், மக்களையும் காக்க ஒன்றுபடுவோம் - அன்புமணி ராமதாஸ்
மாநில செய்திகள்

மூன்றாவது சுரங்கம் அமைக்க என்.எல்.சி. திட்டம்; மண்ணையும், மக்களையும் காக்க ஒன்றுபடுவோம் - அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
13 Aug 2023 12:20 PM IST

என்.எல்.சி.யின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் விரைவில் மூன்றாவது சுரங்கம் அமைக்க என்.எல்.சி. திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடலூர் மாவட்டத்தில் விரைவில் மூன்றாம் சுரங்கம் அமைக்க என்.எல்.சி. திட்டம்!

மண்ணையும், மக்களையும் காக்க ஒன்றுபடுவோம்!

தமிழ்நாட்டிற்கு மின்சாரம் தருவதாகக் கூறி 1956-ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் நுழைந்த என்.எல்.சி. நிறுவனம், இப்போது அடுத்தக் கட்டமாக ரூ.3755.71 கோடியில், 20 கிராமங்களில், 12,125 எக்கரில் மூன்றாவது சுரங்கத்தை அமைக்க முடிவு செய்திருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மூன்றாவது சுரங்கம் தொடங்க ஏற்பாடுகள் தயார்:

* நெய்வேலியில் கடந்த 21.07.2022-ம் நாள் நடைபெற்ற என்.எல்.சி. இயக்குனர்கள் கூட்டத்தில் மூன்றாம் சுரங்கம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சுரங்கத்திலிருந்து ஆண்டுக்கு 11.50 மில்லியன் டன் நிலக்கரி தோண்டி எடுக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

* மூன்றாவது சுரங்கத் திட்டத்தால் அது செயல்படுத்தப்படவுள்ள 26 கிராமங்களில் உள்ள 14,061 குடும்பங்களைச் சேர்ந்த 54,315 பேர் வாழ்வாதாரம் இழந்து, வெளியேற்றப்படுவார்கள்.

* இத்திட்டம் செயல்படுத்தப்படும் 26 கிராமங்களில் 9 கிராமங்கள், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகின்றன. மீதமுள்ள கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியில் அமைந்திருப்பவை. இப்பகுதியில் சுரங்கம் அமைப்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்திற்கு எதிரானது.

திணிக்கும் மத்திய அரசு: துணைபோகும் தமிழக அரசு

* என்.எல்.சி. மூன்றாவது சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுமா? என்று நாடாளுமன்றத்தில் 31.07.2023 அன்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, தமிழக அரசிடமிருந்து அது தொடர்பாக எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று தெரிவித்தார்.

* தமிழக சட்டப்பேரவையில் 05.04.2023-ம் நாள் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் எந்த புதிய நிலக்கரி சுரங்கமும் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், அந்த உத்தரவாதத்தை செயல்படுத்த தமிழக அரசு தயாராக இல்லை.

* என்.எல்.சி. மூன்றாவது சுரங்கத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு தயாராக இல்லை. மாறாக கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்.எல்.சி. முயற்சிக்கு துணையாக நிற்கிறது.

மூன்றாம் சுரங்கத்திற்காக நிலம் எடுக்கப்படும் கிராமங்கள்:

1. சின்ன நற்குணம்

2. கோ. ஆதனூர்

3. பெருவரப்பூர்

4. பெருந்துறை

5. ஓட்டிமேடு

6. வளையமாதேவி

7. கோட்டுமுளை

8. சிறுவரப்பூர்

9. புத்தூர்

10. சாத்தப்பாடி

11. அகர ஆலம்பாடி

12. பு. ஆதனூர்

13. தர்மநல்லூர்

14. பெரிய நற்குணம்

15. விளக்கப்பாடி

16. ஊ.அகரம்

17. எறும்பூர்

18. வளையமாதேவி கீழ்பாதி

19. ஊ. ஆதனூர்

20. கோபாலபுரம்

21. கம்மாபுரம்

22. அரசக்குழி

23. சு. கீரனூர்

24. குமாரமங்கலம்

25. வீரமுடையாநத்தம்

26. ஊ. கொளப்பாக்கம்

ஓட்டாண்டிகள் ஆகும் உழவர்கள்:

* என்.எல்.சி. மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 12,125 ஏக்கர் நிலங்களும் பொன் விளையும் பூமி. நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், மலர் வகைகள் உள்ளிட்ட அனைத்தும் விளையும் அளவுக்கு வளமானது இந்த நிலம் ஆகும்.

* காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வகையான தோட்டக்கலை பயிர்களும் இந்த மண்ணில் விளைகின்றன என்பதால், உழவர்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலான வருமானம் கிடைக்கும்.

* முப்போகம் விளையும் நிலங்களை அடிமாட்டு விலைக்கு பறித்துக் கொண்டால், அதை நம்பியே உள்ள உழவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து ஓட்டாண்டிகள் ஆவதைத் தவிர வேறு வழியில்லை.

என்.எல்.சியால், நிலத்தடிநீரில் 250 மடங்கு பாதரசம்

* என்.எல்.சி. சுரங்கத்தை ஒட்டியுள்ள 31 இடங்களில் பூவுலகின் நண்பர்கள், மந்தன் அத்யயன் கேந்திரா ஆகிய தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் 17 இடங்களில் நிலத்தடி நீரின் தரம் மிக கடுமையாகவும், 11 இடங்களில் மோசமாகவும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

* வடக்கு வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருக்கிறது. 30 மடங்கு துத்தநாகம், 29 மடங்கு செம்பு, 28 மடங்கு நிக்கல் கலந்திருக்கின்றன. தண்ணீரில் பிளோரைடு, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சிலிகான் போன்றவற்றின் விகிதமும் அதிகரித்திருப்பதால் குடிக்க உகந்தது இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம், தோல், மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை விட இது மிக மோசமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

* நிலத்தடி நீர்மட்டம் 8 அடியிலிருந்து 800 அடிக்கும் கீழ் சென்று விட்டது. நச்சு வாயுக்களால் மக்களுக்கு பல வகையான நோய்கள் என ஏற்கனவே பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அடுத்தடுத்து வரவிருக்கும் திட்டங்கள்

* மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தைத் தொடர்ந்து மேலும் 2 நிலக்கரித் திட்டங்களை செயல்படுத்த என்.எல்.சி. திட்டமிட்டிருக்கிறது.

* வீராணம் மற்றும் பாளையங்கோட்டை நிலக்கரித் திட்டங்கள், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் வட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 45,000 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ளன. இதற்கான ஆய்வுகளை மத்திய அரசின் தாது கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனை நிறுவனம் நடத்தியுள்ளது.

* ஏற்கனவே 37,000 ஏக்கரில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டதற்கே கடலூர் மாவட்டம் பாதி பாலைவனமாகி விட்டது. கூடுதலாக 70,000 ஏக்கரில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் கடலூர் முழு பாலைவனமாக மாறுவதை தடுக்கவே முடியாது.

* மின்சாரம் தயாரிக்க காற்று, சூரிய ஒளி, நீர், கடல் அலைகள், திடக்கழிவுகள் என பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால், உணவுக்கான ஆதாரம் நிலம் மட்டும் தான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்த மண் தான் நமக்கு உணவளித்தது. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நமது தலைமுறையினருக்கு உணவளிக்க இந்த நிலங்களை நாம் பாதுகாத்து விட்டுச் செல்வோம்.

* அதற்காக உழவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், பொதுநல அமைப்புகள், மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகிய நாம் அனைவரும் மண்ணையும், மக்களையும் காக்க நிலக்கரி சுரங்கங்கள் என்ற பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக விழித்துக் கொள்வோம்; ஒன்றுபடுவோம்! இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்