< Back
மாநில செய்திகள்
பெரியார் வாழ்க என்று பா.ஜ.க. சொல்லட்டும் - அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி
மாநில செய்திகள்

'பெரியார் வாழ்க' என்று பா.ஜ.க. சொல்லட்டும் - அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி

தினத்தந்தி
|
6 Jun 2024 9:55 PM IST

தி.மு.க. குறித்து விமர்சித்த அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தி.மு.க. குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கனிமொழி, "அண்ணாமலை அடிக்கடி கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்பார். இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி என்ற தகுதியுடன் நான் அவருக்கு பதில் சொல்கிறேன். இந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பா.ஜ.க.வின் மாநில தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல" என்று தெரிவித்தார்.

கனிமொழியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "என் அப்பா கருணாநிதியாக இருந்திருந்தால் நானும் ஜெயித்திருப்பேன். ஆனால் என் அப்பா குப்புசாமி. அவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. ஆக இருந்தது இல்லை. அவர் தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்த்து விவசாயம் செய்கிறார். நான் அவருடைய மகன். எனவே நான் ஜெயிப்பதற்கு கொஞ்சம் நேரம் ஆகும். மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நான் விலக வேண்டும் என்று கனிமொழி சொல்லியிருக்கிறார். ஒருவேளை அவர் பா.ஜ.க.விற்கு வருவதாக இருந்தால் நான் பரிசீலனை செய்கிறேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலளித்துள்ள கனிமொழி, "பா.ஜ.க. முதலில் 'பெரியார் வாழ்க' என்று சொல்ல ஆரம்பிக்கட்டும். அவர்களின் கட்சியை வளர்ப்பதற்காக நான் அங்கே போக வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க.தான் எனக்கு தெரிந்த, நான் நம்பிக்கை வைத்திருக்கக் கூடிய இயக்கம். என்னை இங்கிருந்து யாராலும், எதற்காகவும் அசைக்க முடியாது" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்