இனி 8-ம் வகுப்பு புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய பாடம்
|9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8-ம் வகுப்பு புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய பாடம் ''பெண் உரிமை சார்ந்த சட்டங்கள்'' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றிய பாடங்கள், பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் (2023-24) 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழுக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு குறித்த பகுதிகள் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டுக்கான புத்தகங்களிலும் அவரை பற்றிய பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் 'பன்முகக் கலைஞர்' என்ற தலைப்பில் பல துறைகளில் அவரின் பங்களிப்புகள் குறித்து விரிவாக இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகின.
இதற்கிடையே தற்போது 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடத்தை இடம்பெற செய்து இருக்கின்றனர். சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் குடிமையியல் பிரிவில், 'பெண் உரிமை சார்ந்த சட்டங்கள்' என்ற உட்தலைப்பின் கீழ் வரும் பாடப்பகுதியில் கலைஞர் கருணாநிதி பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் 'கூட்டு குடும்ப சொத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவதற்காக 1956 இந்து வாரிசு உரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட முன்வரைவு 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இந்து கூட்டு குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது, இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தார் என்றும், இதனைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டில் தேசிய அளவில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியிருப்பதோடு, சட்டமன்றத்தில் அவர் உரையாற்றுவது போன்ற படமும் அதில் இடம்பெற்று இருக்கிறது.
கருணாநிதி பற்றி இடம்பெற்றுள்ள பாடங்கள் வரும் கல்வியாண்டில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.