தமிழகத்தில் 17 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவு: வானிலை ஆய்வு மையம்
|தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவே மழை பொழிந்திருக்கிறது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு தொடங்கி, டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்கும். சில நேரங்களில் ஜனவரி முதல் வாரம் வரை கூட இருக்கும்.
அதன்படி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வார இறுதியில் தொடங்கியது. முதல் 2 மழைப் பொழிவில் எதிர்பார்த்த மழை பதிவானது. அதனைத்தொடர்ந்து இடைவெளி ஏற்பட்ட நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடந்த மாண்டஸ் புயல் காரணமாக, வட மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்தது.
அதன்பின்னர், பெரிய அளவில் மழை பதிவாகவில்லை. ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது வரை இயல்பையொட்டி மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தொடங்கியதில் இருந்து நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, 44.1 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் சற்று அதிகமாக 44.5 செ.மீ. மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புள்ளி விவரத்தின் படி அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவே மழை பொழிந்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக திருவாரூரில் 33 சதவீதமும், அதற்கடுத்தபடியாக நாகப்பட்டினம் 31 சதவீதம், தூத்துக்குடி 30 சதவீதம் இயல்பைவிட குறைவாக மழை பதிவாகியிருக்கிறது.
இதேபோல், புதுச்சேரியில் இயல்பைவிட 20 சதவீதமும், காரைக்காலில் 30 சதவீதமும் மழைப்பொழிவு குறைந்திருக்கிறது. அதேநேரத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவான மாவட்டங்களில், அதிகபட்சமாக ஈரோட்டில் 58 சதவீதமும், அதற்கடுத்தபடியாக திருப்பத்தூரில் 55 சதவீதமும், நாமக்கலில் 40 சதவீதமும், கோவையில் 38 சதவீதமும், கிருஷ்ணகிரியில் 37 சதவீதமும், காஞ்சீபுரத்தில் 36 சதவீதமும் அதிகமாக மழை பெய்துள்ளது.
இதுதவிர, சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களிலும் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாகியிருக்கிறது. வழக்கமாக டிசம்பர் 31-ந்தேதியுடன் பருவமழை நிறைவு பெறும். அந்தவகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் சூழலுக்கு வந்திருக்கிறது. அதற்கேற்றாற்போல், கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் மழையும் பதிவாகவில்லை. ஆனால் வானிலை ஆய்வு மையம் பருவமழை நிறைவு பெறுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
பருவமழை தொடங்குவதற்கு முன்பு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முந்தைய கணிப்பின்படி, இயல்பையொட்டி மழை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையொட்டியே இந்த ஆண்டு மழை பதிவானபடி வடகிழக்கு பருவமழை விடைபெறும் என்று ஆய்வு மைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.