மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: 9 பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை
|மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாடியதாக பீதி ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். நேற்று அதிகாலை மீண்டும் செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்கு வாய்க்காலில் சுற்றி திரிந்த பன்றியை கடித்ததால் அங்கு மீண்டு பதற்றம் அதிகரித்தது.
இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தினர். மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த சூழலில் சிறுத்தை நடமாட்டம் தென்படாததால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிக்கூடங்களுக்கு இன்று (ஏப்ரல் 4ந் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருவதாகவும் விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறை, ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, 9 பள்ளிக்கூடங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவித்துள்ளார்.