தேனி
சிறுத்தை மர்மசாவு
|சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தபால் அலுவலகம் செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் உடனே சின்னமனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் சிவாஜி தலைமையில் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். இறந்த கிடந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு சிறுத்தையின் உடலை பரிசோதனை செய்தனர். அதில் சிறுத்தை இறந்து பல நாட்கள் ஆனது தெரியவந்தது. பின்னர் அந்த சிறுத்தையின் உடலை அதே பகுதியில் வைத்து வனத்துறையினர் எரித்தனர். அந்த சிறுத்தை வனப்பகுதியில் வேட்டையாடப்பட்டதா? அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.