நெல்லை, பாபநாசம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது
|விக்கிரமசிங்கபுரம் அருகே ஆடுகளை கடித்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டில் கட்டிப்போட்டிருந்த ஆட்டை, வனப்பகுதியில் இருந்து இறங்கிய சிறுத்தை வேட்டையாடி தூக்கிச் சென்றது. இதேபோல் விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது வீட்டில் இருந்த ஆட்டையும் சிறுத்தை கடித்து தாக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ஆய்வு செய்து, இரு பகுதிகளிலும் மோப்பநாய் 'நெஸ்' மூலமாக மோப்பம் பிடித்து சிறுத்தை வந்த வழியாக பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் சிறுத்தையை பிடிக்க இரும்புக்கூண்டு வைக்கும் இடத்தை தேர்வு செய்தனர்.
அதன்படி வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் நடமாடிய சிறுத்தையை பிடிப்பதற்காக, அங்கு 2 இடங்களில் இரும்புக்கூண்டுகளை வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.