நாமக்கல்
கபிலர்மலை பகுதியில்10 நாட்களாக தொடரும் சிறுத்தைப்புலியின் அட்டகாசம்கால்நடைகளை கொல்வதால் விவசாயிகள் வேதனை
|பரமத்திவேலூர்:
கபிலர்மலை பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடரும் சிறுத்தைப்புலியின் அட்டகாசத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிறுத்தைப்புலி
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைப்புலி ஒன்று கால்நடைகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வருகிறது. சிறுத்தைப்புலி ஆடுகள், கன்று குட்டிகள், வளர்ப்பு நாய்கள் மற்றும் மயில்களை கடந்த 10- நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வருகிறது. அதனை பிடிக்க மாவட்ட வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் டிரோன் கேமரா மூலமும் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். முதுமலை, தேனி மற்றும் கோவை பகுதிகளில் இருந்து வந்துள்ள வன உயரடுக்கு படையினரும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். செஞ்சுடையாம்பாளையம் அருகே உள்ள புலிகரடு மற்றும் அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள குவாரியின் அடர்ந்த பகுதியில் சிறுத்தைப்புலி பதுங்கி இருக்க கூடும் என கூறப்படுகிறது.
கன்றுக்குட்டி
சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு புளியம்பட்டி ரங்கநாதபுரம் தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டில் வளர்த்த கன்று குட்டியை சிறுத்தைப்புலி அடித்து கொன்று சாப்பிட்டு விட்டு மீதி உடல் பாகங்களை போட்டு சென்றது.
மேலும் நேற்று முன்தினம் மீண்டும் அதே பகுதிக்கு சென்ற சிறுத்தைப்புலி சண்முகம் என்பவரது தோட்டப்பகுதியில் உள்ள வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை கடித்து இழுத்து சென்றது. தகவல் அறிந்து அங்கு சென்ற வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 10 நாட்களுக்கு மேலாக அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருவதால் விவசாயிகள் வேதனை கலந்த பீதியில் உள்ளனர்.