கன்னியாகுமரி
சினிமா தியேட்டர்களில் லியோ படம் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ்
|குமரி எல்லையில் உள்ள சினிமா தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு 'லியோ' படம் ரிலீசானது. ரசிகர்கள் உற்சாகத்தோடு நடனமாடி படத்தை வரவேற்றனர்.
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் லியோ படத்தை அதிகாலை 4 மணிக்கு வெளியிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனால் காலை 9 மணிக்கு லியோ படம் வெளியிட ஒளிபரப்பப்பட்டது. ஆனால் கேரளாவில் அதிகாலையிலேயே படம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள ரசிகர்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே படம் பார்ப்பதற்காக கேரள மாநில பகுதிகளுக்கு சென்றனர். களியக்காவிளை அருகே உள்ள 5 தியேட்டர்களிலும், படந்தாலுமூடு அருேக உள்ள ஒரு தியேட்டரிலும் அதிகாலை நான்கு மணிக்கு லியோ படம் திரையிடப்பட்டது.
அந்த தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்கள் முன்கூட்டியே படத்தை பார்த்து ரசித்தனர். முன்னதாக ரசிகர்கள் தியேட்டருக்கு வெளியே நடனம் ஆடும் போது அந்த எல்.இ.டி. அலங்கார மின்விளக்குகள் எரிய விடப்பட்டது.
அதிகாலை நேரம் என்பதால் எல்.இ.டி. மின் விளக்குகள் கண்ணை கவரும் வகையில் இருந்தது. தியேட்டர் முன்பு நடனமாடிய ரசிகர்களுக்கு மேல் 'பார்ட்டி ஸ்பார்க்' தூவப்பட்டது. மேலும் எந்திரம் மூலமாக ரசிகர்கள் மீது வண்ண பேப்பர்கள் பறக்க விடப்பட்டன. இது மேலும் ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் 3 தியேட்டர்களிலும், வெள்ளிச்சந்தை, மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் உள்ள 3 தியேட்டர்களிலும் லியோ படம் நேற்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
படம் தொடங்கியதும் முதல் பாடலுக்கு தியேட்டரின் திரை முன்பு ரசிகர்கள் உற்சாக நடனம் ஆடினார்கள். விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். குமரி மாவட்டத்தில் நேற்று அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று முதல் 22-ந் தேதி வரை ஆன்லைன் புக்கிங் மூலம் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. லியோ படம் மிகவும் அருமையாக இருந்ததாகவும், விஜய் நடிப்பு வித்தியாசமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினார்கள்.
கட்-அவுட்கள் வைப்பதற்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தியேட்டர் முன்பு சிறிய அளவிலான விஜய் கட்-அவுட் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது.