< Back
மாநில செய்திகள்
லியோ திரைப்படம் வெளியீடு; விஜய் ரசிகர்கள் நடனமாடி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

லியோ திரைப்படம் வெளியீடு; விஜய் ரசிகர்கள் நடனமாடி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தினத்தந்தி
|
20 Oct 2023 1:41 AM IST

லியோ திரைப்படம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் நடனமாடி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'லியோ' திரைப்படம் நேற்று வெளியானது. சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், நேற்று காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்பட்டது. திருச்சி மாநகரில் 8 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டது. இதையொட்டி அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் விஜய் கட்அவுட் மற்றும் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும், விஜய் புகைப்படத்திற்கு பூசணிக்காய் சுற்றி சாலையில் தேங்காய் உடைத்து கொண்டாடினர். அதேநேரம் படம் பார்க்க வரும் ரசிகர்கள் முழுமையான சோதனைக்குப் பின்னரே திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக திரையரங்கம் வெளியே நடனமாடிய விஜய் ரசிகர்களிடம், திரையரங்கில் பணிபுரியக்கூடிய பணியாளர்கள் நடனம் ஆடக்கூடாது என அறிவுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்துக்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிகவிலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது திருச்சி பாலக்கரை போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட காவேரி திரையரங்கம் மேம்பாலத்தின் கீழ் திரைப்பட டிக்கெட்டுகளை திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு வாங்கி சட்டத்துக்கு புறம்பாக அதிக விலைக்கு விற்ற வரகனேரியை சேர்ந்த கதிரவன், விமானநிலைய பகுதியை சேர்ந்த ராஜாபாண்டி (27), தென்னூரை சேர்ந்த கண்ணன் (27), சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த இர்பான் (20), அரியமங்கலத்தை சேர்ந்த நிஷாந்த் (21) ஆகியோரை பிடித்து அவர்கள் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்