புதுக்கோட்டை
எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ.60-க்கு விற்பனை
|உற்பத்தி குறைவால் எலுமிச்சை பழங்களின் விலை உயர்ந்தது. கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எலுமிச்சை மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு பராமரித்து வருகின்றனர். கடந்த மாதங்களில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.10-க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருப்பதால் எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ.60-க்கு விற்பனையாகி வருகிறது.
இங்கு உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்கள் திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திருத்துறைப்பூண்டி, சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலமாக சரக்கு வாகனம் மற்றும் பஸ்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பலரும் இளநீர், மோர், சர்பத் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பானங்களை பருகியும், தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிட்டும் வருகிறார்கள்.
இந்தநிலையில் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்து இருப்பதால் அதன் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் அதன் உற்பத்தி குறைவாகவே உள்ளது.