குன்றத்தூரில் பஸ்சில் இருந்து விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம் - நடிகை ரஞ்சனா நாச்சியார் நேரில் ஆறுதல்
|பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ரஞ்சனா நாச்சியார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
சென்னை குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சந்தோஷ். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சந்தோஷ் சக மாணவர்களுடன் அரசு பஸ்சில் பயணித்துள்ளார். சந்தோஷ் பஸ்சின் முன்பக்க படியில் தொங்கியபடி பயணித்துள்ளார்.
குன்றத்தூர் தேரடி பகுதியை பஸ் கடந்தபோது எதிர்பாராத விதமாக சந்தோஷ் முன்பக்க படியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பஸ்சின் பின்பக்க சக்கரம் சந்தோஷின் இரு கால்கள் மீதும் ஏறியுள்ளது. இதில் சந்தோஷின் கால்கள் நசுங்கின.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த குன்றத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மாணவன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையில் மாணவனின் 2 கால்களும் அகற்றப்பட்டன.
இந்நிலையில் அண்மையில் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்து, தாக்கியதாக கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார், மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மூடப்பட்ட கதவுகளை உடைய இலவச பேருந்துகளை பள்ளி மாணவர்களுக்காக அரசு இயக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.