நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப் போராட்டம் தொடரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப் போராட்டம் தொடரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த அரசு பல்வேறு புதிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மக்களைத் தேடி, மருத்துவம் என்ற மகத்தான திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மக்களை வீடுகளுக்கு தேடிச்சென்று 500 வகையான நோய் பாதிப்புகளுக்கு மருத்துவம் பார்க்கிறோம்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து விதமான சட்டப் போராட்டத்தையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். நீட் தேர்வில் நடக்கும் குளறுபடிகளால் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு உரிய வாய்ப்பு மறுக்கப்படுமோ என்கின்ற ஒரு பயம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.