பெரம்பலூர்
பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
|பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் டெய்சிராணி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சட்டப்பணிகள் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகரன் சிறப்புரையாற்றும்போது, பெண்களுக்கான பாலியல் வன்கொடுமையில் இருந்து விடுபடுதல், மகளிருக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது, பிரச்சினை ஏற்பட்டால் சட்ட உதவியை நாடவேண்டிய அவசியம், மாணவிகளுக்கு பாலியல் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக பெற்றோரிடம் அல்லது பள்ளி ஆசிரியரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கட்டாய கல்வி குறித்தும், மாணவர்கள் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும், 18 வயது நிரம்பிய பிறகு ஓட்டுனர் உரிமம் பெற்றபின் மோட்டார் வாகனங்களை இயக்கிசெல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதில் வக்கீல் சங்கர் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்தும், வக்கீல் ஆனந்தி பெண்களுக்கான பாதுகாப்பு பற்றியும், பாலியல் குற்றங்களில் இருந்து மகளிர் விடுபடுதல் மற்றும் தற்காத்துக் கொள்வது பற்றியும் விளக்கிப்பேசினார்கள். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.