பெரம்பலூர்
பெரம்பலூர் கிளை சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
|பெரம்பலூர் கிளை சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொறுப்பு) தனசேகரன் ஆலோசனையின்படியும் பெரம்பலூர் கிளை சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று மாலை நடந்தது. முகாமிற்கு மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் தலைமை தாங்கி சிறைவாசிகளிடையே பேசுகையில், ஜாமீனில் எடுப்பதற்கும், வழக்கு நடத்துவதற்கும் தாங்கள் சட்ட உதவி மையத்தை நாடலாம். மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழுவின் மூலம் கிளை சிறைக்கு வரும் சட்டபணிகள் குழு வக்கீல்களிடம் தங்களுக்கு உரிய பிரச்சனைகளை எடுத்துரைத்து ஆலோசனை பெற்று கொள்ளலாம். வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலும் சட்ட உதவி மையத்தை நாடலாம், என்றார். மேலும் அவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவாக முடிப்பதற்கும் உரிய சட்ட வழிமுறைகளை எடுத்துரைத்தார். இதில் கிளை சிறையின் கண்காணிப்பாளர் சிவா, சட்டபணிகள் ஆணை குழுவின் வக்கீல்கள் திருநாவுக்கரசு, சங்கர் மற்றும் திருஞானம் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தனர். முகாமில் 22 சிறைவாசிகள் கலந்து கொண்டனர். சட்ட உதவி கோரிய மனுக்கள் பெறப்பட்டது.