கலாஷேத்ரா விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் பதில்
|கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சென்னை,
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க விசிக, காங்கிரஸ் உள்ளிட்டபல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத்தீர்மானத்தின் மீது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.அப்போது அவர் கூறியதாவது; கலாஷேத்ராவில் பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபி-க்கு கடிதம் எழுதியிருந்தது. தேசிய மகளிர் ஆணையமே இந்த விவகாரத்தை நாங்கள் முடித்துவிட்டோம் என டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை. இந்த விவகாரம் எனது கவனத்திற்கு வந்தவுடன், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு விவரங்களை அறிந்தேன். இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர், மற்றும் அலுவர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இன்று காலையிலும் வருவாய் அலுவலர், அதிகாரிகள் மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி வருகிறார்கள். மேலும், மாணவிகளின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல் அமைச்சர் பேசினார்.