< Back
மாநில செய்திகள்
திமுக வார்டு உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

திமுக வார்டு உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
3 Nov 2023 11:33 AM IST

தாக்கியவர்களை கைது செய்யாமல் அவர்களை பார்வையிடச் சென்ற அதிமுகவினரை கைது செய்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசரக் கூட்டம் 31.10.2023 அன்று கூடியது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர், பொறியாளர் என்று நகராட்சியின் முக்கிய அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. எனவே, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய அதிகாரிகள் இல்லாமல் இவ்வளவு அவசரமாக நகர மன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன என்றும்; கூட்டத்தில் வைக்கக்கூடிய தீர்மானங்கள் ஏதும் இதுவரை வழங்கப்படாத நிலையில், வேறு ஒரு நாளில் நகர மன்றக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 8 நகர மன்ற உறுப்பினர்களும் தங்களது எதிர்ப்பை, நகர மன்றத் தலைவர் மகரிபா பர்வீனிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த சமயத்தில், திமுக நகர மன்றத் தலைவரின் கணவர் அஷ்ரப் அலியுடைய ஏற்பாட்டில் திமுக-வைச் சேர்ந்த நகர மன்ற வார்டு உறுப்பினர்கள், கழக வார்டு உறுப்பினர்கள் மீது நாற்காலியை எடுத்துப் போட்டு தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியும், நீங்கள் உள்ளே அமர்ந்திருந்தால் உங்களைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். குறிப்பாக, 17-ஆவது வார்டு உறுப்பினர் ரவி மற்றும் 15 ஆவது வார்டு உறுப்பினர் ஸ்ரீராம் ஆகிய இரண்டு திமுக உறுப்பினர்களும், நாற்காலிகளால் கழக நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கும் நிகழ்வுகள் அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளன.

மேலும், நகர மன்ற அவசரக் கூட்டத்தின் தொடக்கத்தில் எந்தவிதமான தீர்மானங்களும் கழக உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத சூழ்நிலையில், திடீரென்று திமுக நகர மன்றத் தலைவர் 'தீர்மானங்கள் ஆல் பாஸ்' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். கழக நகர மன்ற உறுப்பினர்கள் மீது நாற்காலிகளை வீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தியதோடு, கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிய திமுக நகர மன்ற உறுப்பினர்கள், குறிப்பாக, திமுக வார்டு உறுப்பினர்களான ரவி மற்றும் ஸ்ரீராம் ஆகிய இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையரிடமும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர மன்ற உறுப்பினர்கள், மேட்டுப்பாளையம் நகரில் நிலவும் கீழ்க்கண்ட பிரச்சனைகள் குறித்து, நகர மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்ப இருந்தனர். அதன் விபரம் :

1. குப்பைகளை அள்ளி தரம் பிரிக்க அனுபவம் இல்லாத நிறுவனத்திற்கு டெண்டர் கொடுத்ததால், சுமார் 3 மாத காலம் மேட்டுப்பாளையம் முழுவதும் குப்பைகள் அள்ளப்படாத அவல நிலை;

2. சாக்கடை கால்வாய்கள் சரிவர தூர் வாராததால் கழிவு நீர் தேங்கி மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக சாக்கடைகளை தூர் வாருதல்;

3. இரண்டு மாத காலமாக தெரு விளக்குகள் எரியாததால் பாதசாரிகள் மற்றும் பெண்கள் இரவில் அச்சத்துடன் நடமாடக்கூடிய சூழலை மாற்றி, அனைத்து தெரு விளக்குகளையும் சீர்செய்தல்;

4. நகர மன்றத்தின் டெண்டர்கள் அனைத்தும் M3 என்ற நகர மன்றத் தலைவரின் பினாமி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்று வருதல்;

5. வியாபாரிகள் சொத்துவரி மற்றும் குப்பை வரி செலுத்திவரும் நிலையில், மேட்டுப்பாளையம் நகரில் உள்ள உணவகங்களில், திமுக உறுப்பினர்கள் மாதந்தோறும் மிரட்டி மாமூல் வசூல் செய்து வருதல்;

6. சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட முறைகேடான குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து முறைப்படுத்துதல்;

7. வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதில், நகராட்சிக் கட்டணம் முழுவதும் கட்டியிருக்கும் நிலையில், பினாமி ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை அதிகப்படியாக வசூலித்தல் உள்ளிட்ட, மேட்டுப்பாளையத்தில் நிலவும் ஏனைய பிரச்சனைகள் குறித்து கழக வார்டு உறுப்பினர்கள், மேட்டுப்பாளையம் நகர மன்ற அவசரக் கூட்டத்தில் கேள்வி எழுப்புவதற்காக தீர்மானித்திருந்த நிலையில், திமுக நகர மன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக கழக வார்டு உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்ததைக் கண்டித்து 31.10.2023 முதல் நகர மன்றத்தில், 8 கழக நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (2.11.2023) உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய கழக நகர மன்ற வார்டு உறுப்பினர்களையும், இவர்களை பார்வையிடச் சென்ற கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான A.K.செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் P.R.G.அருண்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.

தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்களைக் கைது செய்யாமல், தாக்குதலுக்குள்ளான 8 கழக நகர மன்ற உறுப்பினர்களையும், அவர்களை பார்வையிடச் சென்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்களையும் கைது செய்த, திமுக-வின் ஏவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேட்டுப்பாளையம் நகர மன்ற வளாகத்திற்குள்ளேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கிய, திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது, மேல் நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கழக நகர மன்ற உறுப்பினர்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் காவல் துறைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அரசை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்