< Back
மாநில செய்திகள்
தடை செய்யப்பட்ட 156 மருந்துகளை விற்றால் சட்ட நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை
மாநில செய்திகள்

தடை செய்யப்பட்ட 156 மருந்துகளை விற்றால் சட்ட நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை

தினத்தந்தி
|
28 Aug 2024 12:55 AM IST

மத்திய அரசு தடை செய்துள்ள 156 மருந்துகளைவிற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

பிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன் (எப்டிசி) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான கூட்டு மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் செயல்திறன், எதிர்விளைவுகள் உள்ளிட்டவற்றை மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

சளி, இருமல், சத்து மாத்திரைகள், இதயம், கல்லீரல் நலனுக்கான வைட்டமின் மருந்துகள், ஒவ்வாமை பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் என மொத்தம் 156 கூட்டு மருந்துகளால் எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதையடுத்து மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகளை தமிழகத்தில் எந்த மருந்து கடைகளிலும் விற்பனை செய்யக்கூடாது என்று மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநர் கூறியதாவது:-

மத்திய அரசு தடை செய்துள்ள 156 மருந்துகளை ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் யாரும் விற்பனை செய்யக்கூடாது. ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அந்த மருந்துகள் இருந்தால், அதனை திருப்பி அனுப்ப வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட உற்பதியாளர்களுக்கு அனுப்பிவிடுவார்கள். பின்னர், அந்த மருந்துகள் அழிக்கப்படும். அந்த மருந்துகளை யாராவது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்