பெரம்பலூர்
பட்டாசு ஆலைகள்-கடைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை
|பட்டாசு ஆலைகள்-கடைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிற்சி கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகள், நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 5 குழுவினருக்கான பயிற்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஒவ்வொரு குழுவிலும் வருவாய்த்துறையின் தாசில்தார்கள், போலீசார், தீயணைப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளீர்கள். இந்த ஆய்வுக்குழுவினர் சுழற்சி முறையில் அவ்வப்போது பட்டாசு ஆலை மற்றும் விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
சட்டப்படி நடவடிக்கை
பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதலாக பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா?, அவசர கால வழியை அடைக்கும் அளவிற்கு பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும். தீ தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் உள்ளதா? என்பதையும், அந்த உபகரணங்களின் காலாவதியாகும் கால அளவையும் கண்காணிக்க வேண்டும். பட்டாசு ஆலை மற்றும் கடைக்கு அருகில் புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது.
இது குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வுக்கு செல்லும் குழுவினர் கவனத்தில் கொள்ள வேண்டும். உயிர் விலைமதிப்பற்றது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
பட்டாசு கடைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும். என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்க துணை இயக்குனர் (அரியலூர்) தமிழ்ச்செல்வன் விரிவாக விளக்கினார்.