விருந்துக்கு சென்ற இடத்தில் விரக்தி: கணவரை தவிக்க விட்டு காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்
|தூக்கம் கலைந்த புதுமாப்பிள்ளை அருகில் படுத்திருந்த மனைவி மாரீஸ்வரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள தென்கரை பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி (வயது 21) இவருக்கும் ராஜபாளையம் நகர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் கடந்த மாதம் 21-ம் தேதி நடந்தது.
இந்நிலையில் மறுவீட்டு விருந்தாக மாரீஸ்வரி தனது கணவருடன் தென்கரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் தூங்க சென்றனர். நள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைந்த புதுமாப்பிள்ளை அருகில் படுத்திருந்த மனைவி மாரீஸ்வரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவரது குடும்பதாரிடம் கொடுத்த தகவலின்பேரில் உறவினர்களுடன் விடிய விடிய பல்வேறு இடங்களில் தேடியும் மாரீஸ்வரி என்ன ஆனார் என்று தெரியவில்லை. இது குறித்து கீழராஜகுலராமன் போலீசில் கணவர் கொடுத்த புகாரில் தனது மனைவி மாயமான விவகாரத்தில் தென்கரையை சேர்ந்த காதலன் சுப்பையா பாண்டியன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் திருமணத்திற்கு முன்பு போனில் சிறுதும் சந்தேகம் ஏற்படாதவாறு பேசி தனது எதிர்கால கனவுகளை சிதைத்துவிட்டதாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாரீஸ்வரியை தேடி வருகின்றனர்.