சென்னை
தமிழ் மொழியை கற்றுக்கொள்வதே என் வாழ்நாள் லட்சியம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
|‘‘தமிழ் மொழியை கற்றுக்கொள்வதே என் வாழ்நாள் லட்சியம்’’ என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ''எண்ணித் துணிக'' என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், 10-வது முறையாக நேற்று தமிழ் ஆளுமைகளுடன் அவர் கலந்துரையாடினார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள பாரதியார் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்க செயலாளர் சேயோன், தேவாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சச்சிதானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதியும், மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கத்தின் தலைவருமான வள்ளிநாயகம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் கவர்னருக்கு 'அறிவுக் களஞ்சியம்-2023' விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, தேவாரம் அமைப்பு சார்பில் பன்னிரு திருமுறைகளை மொழி பெயர்த்த 42 பேருக்கு திருமுறைத் திருமகன், திருமுறைத் திருமகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
நான் தமிழ்நாட்டுக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்பு, எனக்கு தமிழ் இலக்கியம் பற்றியும், மொழி பற்றியும் பெரிய அளவில் ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். தமிழ் மொழி இலக்கியச் செறிவு மிகுந்தது என்பதையும், திருக்குறள் பற்றியும் நான் தெரிந்துகொண்டேன்.
திருக்குறளை ஆங்கிலத்தில் நான் படிக்கத் தொடங்கிய பிறகு, அதன் மீது தீவிர காதல் வயப்பட்டேன். நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது என் அப்பா பகவத் கீதையை கொடுத்து படிக்கச் சொன்னார். அப்போதில் இருந்து பகவத் கீதைதான் எனக்கு உற்ற தோழனாக இருந்தது. ஆனால், இப்போது திருக்குறளோடு சேர்த்து 2 புத்தகங்கள் என்னுடைய உற்ற தோழனாக உள்ளன.
திருக்குறளை ஆங்கிலத்தில் படித்தபோது, அதன் விளக்கங்கள் மிக ஆழமானதாக இல்லாததால், சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லையோ? என்று நினைத்தேன். ஆனால், திருக்குறள் எளிதில் புரியக் கூடிய ஒன்றாக இருப்பதை நான் அறிந்தேன்.
சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் நான் சமஸ்கிருதத்தை பார்த்தேன். அப்போது அக உணர்வு, மெய்யுணர்வு ஆகியவற்றை பற்றி திருக்குறள் பேசியிருப்பதை உணர்ந்தேன். பதிணென்கீழ்கணக்கு புத்தகங்களை படித்தபோது நான் வியந்தேன். மொழிதான் மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
நான் கவர்னரோ இல்லையோ, தமிழ் மொழியை முழுவதுமாக கற்றுக்கொள்வதை என் வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டுள்ளேன். தத்தி நடக்கும் குழந்தை போல நான் இருக்கிறேன் என்பது முக்கியம் அல்ல. நான் தொடங்கி விட்டேன் என்பதே முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.