திருவாரூர்
போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும்
|தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சாய்ந்து கிடக்கும் மரம்
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை என்பது திருவாரூர் வழியாக செல்கிறது. இதனால் வேளாங்கண்ணி, நாகூர் போன்ற பகுதிக்கு அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை என்பது எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது.
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஓடம்போக்கி ஆறு செல்கிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஒடம்போக்கி ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரம் வேரோடு சாய்ந்து அருகில் உள்ள வேப்ப மரத்துடன் சேர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் சாய்ந்து கிடக்கிறது.
போக்குவரத்து இடையூறு...
இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும்போது சாய்ந்து கிடக்கும் மரத்தின் கிளையில் சிக்கி விபத்து ஏற்படும் அபாய நிலை இருந்து வருகிறது.
இந்த மரம் சாய்ந்து 2 நாட்கள் ஆகியும் எந்த துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாய்ந்து கிடக்கும் மரத்தினை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.