< Back
மாநில செய்திகள்
தலைவர்கள் சிலை அமைக்கும் பணிகள்: காந்தி மண்டப வளாகத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
சென்னை
மாநில செய்திகள்

தலைவர்கள் சிலை அமைக்கும் பணிகள்: காந்தி மண்டப வளாகத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

தினத்தந்தி
|
25 Jan 2023 10:55 AM IST

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அயோத்திதாசப் பண்டிதர் நினைவு மண்டபம் பணிகள், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரது சிலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் தியாகச் சீலர்களின் நினைவு மண்டபங்களை மேம்படுத்தும் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று நேரில் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்திதாசப் பண்டிதருக்கு சிலையுடன் கூடிய நினைவு அரங்கத்திற்கான பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் சுப்பராயன் சிலையும் அமைக்கப்பட இருக்கிறது.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு இங்கே இருக்கிறது. அதனுடைய அரங்கம் புதுப்பிக்கப்பட்டு, மார்பளவு சிலை வைக்கப்படுகிறது. வ.உ.சிதம்பரனார் கோவை மத்திய சிறையில் பல ஆண்டு காலம் இருந்தது மட்டுமல்ல, அங்கேதான் அவர் செக்கு இழுத்தார். எனவே, அதனுடைய நினைவாக கோவை வ.உ.சி. மைதானத்திலும் அவருடைய சிலையும் அமைக்கப்பட இருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கும் பணி ஏறத்தாழ 98 சதவீதம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதேபோல, மருது சகோதரர்களுக்கான சிலை அமைக்கும் பணிகளில் இன்னும் 5 சதவீதம் பணிகள் முடிக்க வேண்டியிருக்கிறது. இப்பணிகள் முடிவுற்ற பிறகு ஒவ்வொன்றாக மக்கள் பார்க்கக்கூடிய வகையில் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்