திருச்சி
இ-பைலிங் முறையை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
|இ-பைலிங் முறையை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து கோர்ட்டுகளிலும் வழக்குகளை இ-பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த மாதம் 1-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், அனைத்து கோர்ட்டுகளிலும் இதற்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் கண்டன ஊர்வலம், கோர்ட்டு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். போராட்டம் நடத்திய வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த, 15-ந்தேதி, இ-பைலிங் கமிட்டி தலைவரையும், 21-ந்தேதி, தலைமை நீதிபதியையும் சந்தித்து கூட்டு நடவடிக்கை குழுவினர் பேசினர்.
அப்போது, இ-பைலிங் முறையை 6 மாதம் ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், கால அவகாசம் வழங்கவில்லை. இதனால் இ-பைலிங் முறையை கண்டித்து நேற்று காலை, மாநிலம் முழுவதும் அனைத்து கோர்ட்டுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்தது. அதன்படி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டு நடவடிக்கை குழுவின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திருச்சி பார் அசோசியேசன் செயலாளர் கண்ணன் உள்பட வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.