கன்னியாகுமரி
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை பெண் வக்கீலை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
|மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குழித்துறை:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் வக்கீல் தாக்கப்பட்டார்
மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவன், மனைவி பிரச்சினை தொடர்பாக விசாரணை நடந்தது. இதில் கணவனுக்கு ஆதரவாக குழித்துறை கோர்ட்டில் பணியாற்றும் பெண் வக்கீல் சூரியகுமாரி சென்றிருந்தார்.
அங்கு விசாரணையின் போது வக்கீல் சூரியகுமாரியிடம் ஸ்ரீஜி (வயது30), ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சூரியகுமாரியை ஸ்ரீஜி திடீரென தாக்கியுள்ளார்.
வக்கீல்கள் முற்றுகை
இதுகுறித்து வக்கீல் சூரியகுமாரி மார்த்தாண்டம் போலீசில் 2 பேர் மீதும் புகார் கொடுத்தார். அதன்பேரில் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஸ்ரீஜியை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
அதன் பிறகு ஸ்ரீஜி தொலைபேசி மூலம் வக்கீல் சூரிய குமாரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. எனவே நேற்று வக்கீல்கள் குழித்துறை கோர்ட்டை புறக்கணித்து விட்டு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது வக்கீலை மிரட்டிய ஸ்ரீஜியை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்றனர்.
பேச்சுவார்த்தை
இந்த முற்றுகை போராட்டத்திற்கு குழித்துறை வக்கீல்கள் சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பெனட்ராஜ், பொருளாளர் விஜய் ஆனந்த், முன்னாள் செயலாளர்கள் ரமேஷ், விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு, மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் வந்து வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.