பெரம்பலூர்
வக்கீல்கள் 6-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பு
|வக்கீல்கள் 6-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கோர்ட்டில் தாக்கல் செய்யும் அனைத்து மனுக்களும், வழக்கு ஆவணங்களும் ஆன்லைனில் இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது மிக கடினமாக இருப்பதால் வக்கீல்களின் நலன் கருதியும், நீதிமன்ற பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும் இ-பைலிங் உடனடியாக கட்டாயப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்றும், இ-பைலிங் தாக்கல் முறையை தற்காலிகமாக நிறுத்தும் வரை பெரம்பலூர் பார் அசோசியேஷன் (குற்றவியல்) தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையிலான வக்கீல்களும், பெரம்பலூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் மணிவண்ணன் தலைமையிலான வக்கீல்களும் கடந்த 7-ந்தேதி முதல் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளில் பணிகளை புறக்கணிப்பை தொடங்கினர். கோர்ட்டு விடுமுறை நாளான சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து தொடர்ந்து 6-வது நாளாக நேற்றும் 2 அசோசியேஷனை சேர்ந்த வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) கோரிக்கையை வலியுறுத்தி அட்வகேட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் ஊர்வலம் செல்லவுள்ளனர். மேலும் பெரம்பலூர் அட்வகேட் அசோசியேஷன் வக்கீல்கள் வருகிற 18-ந்தேதியும், பெரம்பலூர் பார் அசோசியேஷன் (குற்றவியல்) வக்கீல்கள் 19-ந்தேதி வரையிலும் தொடர்ந்து கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் அன்றைய தினங்களின் அடுத்த கட்ட போராட்டங்களை 2 அசோசியேஷன்களும் அறிவிக்கவுள்ளனர்.