< Back
மாநில செய்திகள்
வக்கீல்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை - தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில்
மாநில செய்திகள்

வக்கீல்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை - தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில்

தினத்தந்தி
|
15 Oct 2023 2:57 AM IST

நீதிமன்றங்களுக்கு செல்லும் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட் அணியக்கூடாது என்றும், பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என்றும் தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அனைத்து பார் கவுன்சில் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வக்கீல்கள் இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி ஆடை விதிமுறைகள் பின்பற்றுவது இல்லை என்று பார் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனவே, வக்கீல்கள் அணியும் ஆடைகள், கவுன்களின் வடிவம் இந்திய பார் கவுன்சில் விதிகளின் படி, இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அனைத்து நீதிமன்றங்களிலும் ஆஜராகும் வக்கீல்கள் கண்ணியமாக ஆடைகளை அணிய வேண்டும். ஆண் வக்கீல்களை பொறுத்தவரை, வக்கீல்களின் கவுன்களுடன் கூடிய கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, வெள்ளை சட்டை அணிய வேண்டும், வக்கீல் கவுன்களுடன் முழு நீள கருப்பு அல்லது வெள்ளை பேண்ட் அணிந்துவர வேண்டும். ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது.

பெண் வக்கீல்கள் கருப்பு முழுக்கை ஜாக்கெட், வெள்ளை கலர் ஜாக்கெட், வெள்ளை பட்டைகள் வக்கீல்களின் கருப்பு கவுன்கள் அணிய வேண்டும். புடவைகள், சுடிதார், சல்வார்-குர்தா உள்பட பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும். ஜீன்ஸ், கேப்ரி பேன்ட், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்றவை கண்டிப்பாக அணியக்கூடாது. நீதிமன்றத்தில் எல்லா நேரங்களிலும் பரிந்துரைக்கப்பட்ட உடையில் மட்டுமே ஆஜராக வேண்டியது அனைத்து வக்கீல்களின் கடமை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்