< Back
மாநில செய்திகள்
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்துக்கு தடைக் கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
மாநில செய்திகள்

ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்துக்கு தடைக் கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

தினத்தந்தி
|
18 Aug 2023 10:45 PM IST

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயலர் படத்தை திரையிட தடை விதிக்கக்கோரியும், இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.எல்.ரவி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜெயிலர் திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். இந்த திரைப்படத்தில் மிக மோசமான, படு பயங்கரமான வன்முறை காட்சிகள் பல இடம் பெற்றுள்ளன. இந்த திரைப்படத்துக்கு 'யுஏ' சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது. அதனால், எந்த தடையும் இல்லாமல் இளைஞர்கள், குழந்தைகள் இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.

ஆனால், படுபயங்கரமான வன்முறை காட்சிகள் பல இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. பெரிய சுத்தியலை கொண்டு ஒருவரின் தலையை அடித்து சிதைப்பது, பெரிய வாளை வைத்து ஒருவரது தலையை ரஜினிகாந்த் துண்டிப்பது போன்ற வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே தமிழ்நாட்டில் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களின் பற்களை அகற்றினார் என்ற குற்றச்சாட்டில் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, இந்த படத்தில், திகார் சிறையில் ரஜினிகாந்த் ஜெயிலராக இருக்கும்போது தண்டனை கைதியின் காதை துண்டிப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளன.

சினிமா என்பது மக்களை மிக எளிதில் கவர்ந்து விடும். அப்படி இருக்கும்போது, இந்த படத்தை பார்க்கும் இளைஞர்கள், குழந்தைகளின் மனதில் வன்முறை எண்ணம் தான் உண்டாகும். எனவே, ஜெயிலர் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட யுஏ தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்