< Back
மாநில செய்திகள்
நாடு முழுவதும் பொது மருத்துவ கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு - தமிழக அரசு
மாநில செய்திகள்

நாடு முழுவதும் பொது மருத்துவ கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு - தமிழக அரசு

தினத்தந்தி
|
11 Jun 2023 5:35 AM IST

நாடு முழுவதும் பொது மருத்துவ கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பொது மருத்துவ கலந்தாய்வு

இந்தியா முழுவதும் மருத்துவ கல்வியில் ஆண்டு தோறும் ஒரு லட்சம் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை 100 சதவீதம் மையப்படுத்த அதாவது பொது மருத்துவ கலந்தாய்வு நடத்த தேசிய மருத்துவ கழகம் (என்.எம்.சி.) முன் வந்துள்ளது. அதன்படி அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒரு கட்ட கலந்தாய்வு மூலம் நடத்த என்.எம்.சி. திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் மருத்துவக் கல்வியில் சேர மாணவர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால செயல்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்த முடியும் என்றும் என்.எம்.சி. கருதுகிறது.

'நீட்' தகுதி பட்டியலின்படி...

இதுதொடர்பாக கடந்த 2-ந் தேதியிட்ட தேசிய மருத்துவ கழகத்தின் அறிவிப்பில், ''நீட்-யுஜி தகுதிப்பட்டியல் அடிப்படையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையை பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பொது கலந்தாய்வை நடத்த அதிகாரியை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்றும் எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களை நிரப்புவதற்கான முறையை அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் தேசிய மருத்துவ கழகம் கூறியுள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவ கழகத்தின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, என்.எம்.சி.யின் இந்த முன்மொழிவு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் தெரிவிக்கப்படும். பொதுக் கலந்தாய்வை நடத்துவது பற்றிய முறையை அனைத்து அரசும் ஒப்புக்கொண்ட பிறகு இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

வழக்கு தொடர முடிவு

மருத்துவ கல்வி சேர்க்கை ஒழுங்குபடுத்துதல்-2023 விதியின் மூலம் இந்தியா முழுவதும் பொது கலந்தாய்வை கொண்டு வரும் தேசிய மருத்துவ கழகத்தின் முயற்சியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தேசிய மருத்துவ கழகம் என்ற ஒரு மத்திய அமைப்பு, மாநில அரசு கல்லூரிகள், மத்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களுக்கான 15 சதவீத அகில இந்திய கல்வி இடங்களை மட்டும் கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு ஒழுங்குமுறை விதிகள் அனுமதிக்கின்றன. ஆனால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒழுங்கு முறை, தேசிய மருத்துவக்கழக 2019-ம் ஆண்டு சட்டத்திற்கு இணக்கமாக இல்லை.

இந்த சட்டத்தின்படி, மாநில அரசுக்கான கல்வி இடங்களை அந்தந்த மாநிலங்களே கலந்தாய்வு மூலம் நிரப்ப முடியும். எனவே இதுபோன்ற ஒழுங்குமுறைகள் எதுவும் மாநில அரசின் உரிமைகளை பாதிக்காமல் இருப்பதற்கான அனைத்து சட்ட வழிமுறைகளையும் நாடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு கடிதம்

கடந்த 2-ந் தேதியன்று தேசிய மருத்துவ கழகம் அறிவித்தபடி, புதிய பொது கலந்தாய்வு நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கும் தேசிய மருத்துவக் கழக 2019-ம் ஆண்டு சட்டத்திற்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சட்டத்தின் 14 (3)-ம் பிரிவில், அகில இந்திய கல்வி இடங்களுக்கான மருத்துவ பொது கலந்தாய்வை மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரி நடத்தலாம். மாநில அளவிலான கல்வி இடங்களுக்கான பொது கலந்தாய்வை மாநில அரசு நியமிக்கும் அதிகாரி நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தமிழக அரசுக்கு சுகாதார சேவை பொது இயக்குனர் அதுல் கோயல் கடிதம் எழுதியிருந்தார். அதில், மருத்துவ கல்வி இடங்கள் முடங்குவதை தவிர்க்கவும், மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தவும் மருத்துவ கவுன்சிலிங் குழு மூலம் அனைத்து அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி கல்வி நிறுவனங்களின் கல்வி இடங்களுக்கு மையப்படுத்தப்பட்ட பொதுக் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

பதில் கடிதம்

இந்த நிலையில் கடந்த மே மாதம் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. அதில், பொது கலந்தாய்வை கடுமையாக எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக டெல்லிக்கு சென்று தமிழக மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர்.

இதுபற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, 'பொது கலந்தாய்வு முறை இருக்காது' என்று மத்திய அரசு கூறியதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

இதுகுறித்து தமிழகத்தின் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளிடம் பேசியபோது, 'அனைத்து மருத்துவக் கல்வி இடங்களையும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறை மூலம் நிரப்பும் முறையை திரும்பப் பெறுவதாக மத்திய அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்த கடிதமும் வரவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்