< Back
மாநில செய்திகள்
விளையாட்டுப்போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை ஏற்க முடியாது - டாக்டர் ராமதாஸ்
மாநில செய்திகள்

விளையாட்டுப்போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை ஏற்க முடியாது - டாக்டர் ராமதாஸ்

தினத்தந்தி
|
10 Oct 2023 10:30 PM IST

விளையாட்டுப்போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை ஏற்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக்கூடங்கள் போன்ற இடங்களில் மது அருந்துவதற்கு அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கடந்த மார்ச் 18-ந்தேதி அரசிதழில் வெளியிட்ட போதே அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது.

அதைத்தொடர்ந்து திருமண அரங்குகளில் மது அருந்த அனுமதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. ஆனாலும், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகளிலும் மது வினியோகம் செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களைக் காப்பதில் கவனம் செலுத்தாமல், மது வணிகம் செய்வதில் கவனம் செலுத்துவதை ஏற்க முடியாது.

சேவை பெறும் உரிமைச்சட்டம், லோக் ஆயுக்தா அமைப்பை வலுப்படுத்துவதற்கான சட்டம், வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் என உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டங்கள் ஏராளமாக உள்ளன.

அவற்றை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு, விளையாட்டுப்போட்டிகளிலும், பன்னாட்டு நிகழ்வுகளிலும் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை மட்டும் அவசர, அவசரமாகக் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது.

இந்த சட்டத்திருத்தத்தை அறிமுக நிலையில் தொடங்கி அனைத்து நிலைகளிலும் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும். மக்களின் உணர்வுகளை மதித்து இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்