பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை: திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
|பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் தலைமையில் உயர்மட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் விமான நிலையத்தில் நடைபெற்றது.
திருச்சியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனி விமானம் மூலம் அன்று காலை 10.10 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு செல்கிறார். அங்கு பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கு ரூ.1,200 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை அவர் திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். விழா முடிந்தவுடன் மதியம் 1.15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விமான நிலையத்தின் உட்புறங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும், விமான நிலையத்தின் வெளிப்புறம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் மாநகர போலீசாரும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கிடையே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) அதிகாரிகள் நேற்று முன்தினம் திருச்சி வந்தனர். அவர்கள் விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இரு இடங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது விழா நடைபெறும் தினத்தன்று 5 அடுக்கு பாதுகாப்பாக உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் தலைமையில் உயர்மட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பிரதீப் குமார், போலீஸ் கமிஷனர் காமினி, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இதேபோல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.