திருச்சி
சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
|தமிழக கவர்னரை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கவர்னர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக கவர்னரை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கவர்னர் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர்.
சட்ட கல்லூரி மாணவர்கள்
தமிழக சட்டசபை கூட்டத்தின்போது கவர்னர் ஆர்.என்.ரவி தலைவர்கள் பற்றி குறிப்பிடாததை கண்டித்தும், கவர்னரை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அரசு சட்ட கல்லூரி முன்பு சட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் ஹரிராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன் கண்டன உரையாற்றினார். இதில் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க மாட்டோம், கவர்னரை நாட்டை விட்டு தூக்கி எறிவோம் என கோஷமிட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
உருவ பொம்மை எரிக்க முயற்சி
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணைசெயலாளர் சோழன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாணிக் முருகேசன் கண்டன உரையாற்றினார்.
இதில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வரும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக் கோரி கோஷமிட்டனர். பின்னர் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆதித்தமிழர் பேரவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.