கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்திருக்கோவிலூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம்
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று திருக்கோவிலூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்கோவிலூர்,
இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட முதல் மாநாடு திருக்கோவிலூரில் தோழர் சுரேஷ் மோகன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு வழக்கறிஞர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, மறைந்த வழக்கறிஞர்கள் மற்றும் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்த பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க செயல்பாடுகள் குறித்து வழக்கறிஞர் அர்ச்சனா விளக்கி பேசினார். சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகளாக தலைவர் மூர்த்தி, துணை தலைவராக பிரசன்னா, செயலாளராக அர்ச்சனா, துணை செயலாளராக கண்மணி, பொருளாளராக பரமசிவம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சதீஸ் ஷர்மா, வெங்கடேஷ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும். போலி வழக்கறிஞர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில் வழக்கறிஞர் சங்க மாவட்ட துணை தலைவர் எஸ்.பிரசன்னா நன்றி கூறினார்.