பெரம்பலூர்
தனிநபர் கடத்தலுக்கு எதிரானசட்ட விழிப்புணர்வு முகாம்
|தனிநபர் கடத்தலுக்கு எதிரானசட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீசின் ஆலோசனையின் படியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியும், இந்தோ அறக்கட்டளையும் இணைந்து தனி நபர் கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாமினை கல்லூரியில் நேற்று நடத்தியது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் மாணவ-மாணவிகளிடையே பேசுகையில், மனித கடத்தல் நவீன முறையில் இப்போது நடந்து வருகின்றது. மனிதர்களின் உடல் உறுப்புகளை திருடுவதற்காகவும், மனிதர்களை கொத்தடிமைகளாக வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் நிறுவன மையப்பட்ட அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு பல வழிமுறைகளை அரசாங்கம் வைத்துள்ளது. மாணவ-மாணவிகள் ஆள் கடத்தல் தொடர்பாக தகவல் கிடைக்கும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு 181, 1098 என்ற அவசர உதவி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் அளித்து மனித கடத்தலை தடுப்பதற்கு உதவிட வேண்டும், என்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைமை சட்ட உதவி ஆலோசகரும், மூத்த வக்கீலுமான சீராஜூதீன், உதவி ஆலோசகர் வக்கீல் தினேஷ் மனித ஆள் கடத்தல் குறித்து மாணவிகள் புரிந்து கொள்ளும் படி பேசினர். அறக்கட்டளையின் மேலாளர் செல்வகுமார் பேசினார். முன்னதாக கல்லூரி சமூக பணி துறை தலைவரும், கவுரவ விரிவுரையாளருமான செல்லம் வரவேற்றார். முடிவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் நன்றி கூறினார்.