< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
5 May 2024 3:14 PM IST

தி.மு.க. அரசின் வன்முறை ஆதரவுப் போக்கினால், தமிழ்நாடே வன்முறையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சமூக விரோதிகளின் புகலிடம் தமிழ்நாடு என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்று சொல்லும் அளவுக்கு கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து காணப்படுகிறது. காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா என்று பொதுமக்கள் சந்தேகப்படக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது. இதனை நிரூபிக்கும் விதமாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த கே. பி. ஜெயக்குமார் தன்சிங் கடந்த மாதம் 30-ம் தேதி திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளதாகவும், அந்தப் புகார் மனுவில் சில நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளதாகவும், கொலை செய்யும் நோக்கத்துடன் தன்னுடைய வீட்டை சுற்றி ஆட்கள் நடமாடிக் கொண்டு இருப்பதாகவும், பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமார் தன்சிங்கின் மகன் தனது தந்தையை இந்த மாதம் 2-ம் தேதி முதல் காணவில்லை என்று திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், ஜெயக்குமார் தன்சிங் உடல் கரைச்சுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஜெயக்குமார் தன்சிங்கின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனக்கு கொலை மிரட்டல் வருகிறது என்று முன்கூட்டியே காவல் துறைக்கு புகார் கொடுத்தும், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எரித்து கொலை செய்யப்படுகிறார் என்றால், அந்த அளவுக்கு அலட்சியப் போக்குடன் தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயக்குமார் தன்சிங் அளித்த புகாரின் அடிப்படையில், போதுமான பாதுகாப்பினை தி.மு.க. அரசு அளித்திருக்குமேயானால், இந்தக் கொலை நிகழ்ந்திருக்காது. அதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாட்டினைப் பார்க்கும்போது சமூக விரோதிகளுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

தி.மு.க. அரசின் வன்முறை ஆதரவுப் போக்கினால், தமிழ்நாடே வன்முறையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது. மொத்தத்தில், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. தி.மு.க. ஆட்சியில் சமூகவிரோத சக்திகள், வன்முறையாளர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதையே தமிழகத்தில் தற்போது நிலவும் நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களுக்குப் பயன்படாத, உதவாத, உபயோகமற்ற, தன்னல குடும்ப ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான காலமும், நேரமும் கனிந்துவிட்டது. சமூக விரோதிகளை, வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் உறுதியான அரசு அமைய வேண்டுமென்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது.

எனவே, முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்றும், மேற்படி கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்