'தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது' - எடப்பாடி பழனிசாமி
|தி.மு.க. சனாதனத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை,
கோவையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவை மக்களை வாட்டி வதைக்கின்ற சூழலில், மக்களை திசைதிருப்புவதற்காக சனாதன ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம் குறித்து பேசுபவர்கள், உயர்ந்த பதவிகளுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடும் போது அதனை எதிர்த்து வாக்களித்தவர்கள். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோருக்கு எதிராக தி.மு.க.வினர் வாக்களித்தனர்.
முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபால், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரை சட்டப்பேரவையில் தாக்கி தி.மு.க.வினர் இழிவுபடுத்தினார்கள். மேலும் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை அந்த பதவியில் இருந்து நீங்க வைத்தார்கள். இவ்வாறு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு அநீதி இழைத்த தி.மு.க. கட்சி இன்று சனாதனத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.