சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: போலீசாரை மிரட்டுவோர் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் போலீசாரை மிரட்டுவோர் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
காவல் துறை என்பது நாணயத்தின் இரு பக்கம் போன்றது. சட்டப்படி நடப்பவருக்கு நண்பர் எனும் பக்கம், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிரி என்ற பக்கம்தான் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட காவல் துறையையே மிரட்டும் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்களும் தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வருவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவின்கீழ் விசாரணை மேற்கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை, கொளத்துப்பாளையம் நகர தி.மு.க. செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் மறுக்கவே, 'தொப்பியை கழற்றி விடுவேன், ஜாக்கிரதை' என்று தி.மு.க. செயலாளர் மிரட்டியுள்ளார்.
சாதனை என்ற பெயரில் வேதனை
இதே திருப்பூர் நம்பியாம்பாளையத்தில் உள்ள காய்கறி-பழ கடையில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த தி.மு.க. நிர்வாகி அங்குள்ள கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிகப் பெரிய ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது தமிழ்நாட்டில் காவல் துறையினரையும், பொதுமக்களையும் மிரட்டும் அளவுக்கு தி.மு.க.வின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் 'திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்' என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து தி.மு.க. கூட்டத்திற்கு மேடை அமைக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. சாதனை என்ற பெயரில் மக்களுக்கு வேதனையை தி.மு.க.வினர் அளித்து வருகின்றனர்.
அராஜகமும், அத்துமீறலும்...
தி.மு.க.வினரின் அராஜகத்தை, அத்துமீறல்களை கட்டுப்படுத்தி வைத்தாலே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில் 50 சதவீதம் குறைந்துவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. எனவே, பொதுமக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையிலும், சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது, காவல் துறையையே மிரட்டுபவர்கள் மீது, கட்சி வித்தியாசமின்றி கடும் நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.