பெரம்பலூர்
லாரி மோதி பிளஸ்-2 மாணவர் பலி
|லாரி மோதி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்.
செய்முறை தேர்வு முடிந்து...
பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை ராஜ் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் தீபக் (வயது 17). இவரது உறவினரும், நண்பருமான வெள்ளனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பாலாஜி(17). இவர்கள் 2 பேரும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.
தீபக் உயிரியல் பிரிவிலும், பாலாஜி கணினி அறிவியல் பிரிவிலும் படித்து வந்தனர். நேற்று பள்ளியில் அரசு பொதுத் தேர்வுக்காக செய்முறை தேர்வு நடந்தது. இதில் பாலாஜி கலந்து கொண்டார். தேர்வு முடிந்த பின்னர் மதிய உணவு இடைவேளையில் பாலாஜியும், தீபக்கும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
ஷேர் ஆட்டோவில் மோதியது
தீபக் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பாலாஜி பின்னால் அமர்ந்திருந்தார். பெரம்பலூர் சங்குபேட்டை ரவுண்டானாவை கடந்து வந்தபோது, முன்னால் சென்ற ஷேர் ஆட்டோவில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பாலாஜியும், தீபக்கும் கீழே விழுந்தனர்.
அப்போது பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தீபக், பாலாஜி ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சாவு
இதில் பாலாஜி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீபக் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தஞ்சை மாவட்டம், பாபநாசம் பாலாஜி நகரை சேர்ந்த கேசவனை(57) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.