< Back
மாநில செய்திகள்
அரசு-உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட்  சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

அரசு-உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

தினத்தந்தி
|
6 Jun 2022 12:13 AM IST

‘நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். இதில், 155 போ் கலந்து கொண்டனர்.

'நீட்' தேர்வு

மருத்துவ படிப்பு பயில நுழைவு தேர்வான 'நீட்' தேர்வில் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். கடந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்று 'நீட்' பயிற்சி பெற்ற 544 பேருக்கு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயில வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி கடந்த கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேருக்கு எம்.எம்.பி.எஸ். படிப்பு பயிலவும், ஒருவருக்கு பல் மருத்துவம் படிக்கவும் இடம் கிடைத்தது.

300 பேர் விண்ணப்பிப்பு

இந்த நிலையில் வரும் கல்வியாண்டிற்கான 'நீட்' தேர்வு அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அவர்களுக்கு சில மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாட்டில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற சுமார் 300 பேர் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

இதையடுத்து, அவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கி சிறப்பு பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து பேசுகையில், சாதி, மத பேதமின்றி அனைவரும் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு கல்வி ஒன்றே ஆயுதமாகும். கல்வி என்ற ஆயுதத்தை மாணவ-மாணவிகள் சரியாக பயன்படுத்தினால் உயர்ந்த நிலைக்கு வந்து விடலாம்.

'நீட்' தேர்வுக்கு கடுமையாக படித்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, என்றார்.

இலவச குறிப்பேடு

முன்னதாக அவர் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக குறிப்பேடுகளை வழங்கினார். தொடக்க விழாவில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், 'நீட்' பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அறிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்புக்கு மாவட்டத்தில் இருந்து 155 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அவர்களுக்கு பாடக்குறிப்புகளின் நகல்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

மேலும் செய்திகள்