சென்னை
சென்னையில் சைபர் கிரைம் செல்போன் செயலி அறிமுகம்; சிறப்பாக செயல்பட்ட 77 போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
|சென்னையில் சைபர் கிரைம் செல்போன் செயலியை அறிமுகப்படுத்திய போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், சிறப்பாக செயல்பட்ட 77 போலீசாருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
சைபர் கிரைம் செயலி
சென்னை போலீசில் 'சைபர் அலர்ட் ஆப்' என்ற பெயரில் சைபர் குற்றங்களின் தொகுப்பு அடங்கிய சைபர் கிரைம் செல்போன் செயலி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் சைபர் குற்றங்களுக்காக குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்கள், வங்கி கணக்குகள், சமூகவலைதள கணக்குகள், இ-மெயில் ஐடிகள், மற்றும் இணையதள முகவரிகள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விபரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த செயலி சைபர் குற்றவாளிகளை எளிதில் கைது செய்யவும் உதவியாக இருக்கும்.
இந்த 'சைபர் அலர்ட் ஆப்' செயலியை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர்கள் நாகஜோதி, மீனா, ஸ்டாலின் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
77 போலீசாருக்கு பாராட்டு
மேலும் பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 77 போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பெண் போலீசாரின் 50-வது ஆண்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட பாய்மர படகு போட்டியில் கலந்து கொண்ட இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, முத்தேழு உள்ளிட்ட 9 பெண் போலீசாருக்கும் கமிஷனர் பரிசு வழங்கி பாராட்டினார்.